அம்மாவும் மழையும்

விடாது பெய்து கொண்டே இருக்கிறது மழை.

மழைத்தூறல்களில் நான் நனைந்து படியேறும் போதில் நீ உன் புடவைத் தலைப்பில் என் தலை துவட்டிய நாளின் நினைவுகள் மீண்டும் மனக்குளத்தில் அலையாய்…

வேலை கிடைத்து வெளியூர் கிளம்பிய ஓர் மழைநாளின் இரவில் சுருட்டி வைத்த சில ரூபாய் நோட்டுக்களை என் கையில் நீ திணித்த நாளின் நினைவுகள் மீண்டும் மனக்குளத்தில் அலையாய்…

மழை பெய்து முடிந்த ஒரு மதியத்தில் இருமலும் காய்ச்சலுமாய் நீ இருந்த கணத்தில் உன் கையில் நான் கொடுத்த பணத்தாள்களை” குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடு” என்று மீண்டும் என் கையில் கொடுத்த நாளின் நினைவுகள் மீண்டும் மனக்குளத்தில் அலையாய்…

ஒரு மழைக்கால மாலையில் உன்னை மருத்துவமனை அவசரச்சிகிச்சை பிரிவில் சேர்த்த நாளின் நினைவுகள் மீண்டும் மனக்குளத்தில் அலையாய்…

உன்னை அருகிலிருந்து கவனிக்கக் கூட இயலாது என் வாழ்க்கை,என் குடும்பம் என்று உன்னை மூத்தோர் இல்லத்தில் விட்டு வந்து மூன்று வருடங்கள் ஓடிய நிலையில் உன் கடைசி சுவாசம் அடங்கத் துடிக்கும் இந்நொடியில் கிளம்பத் தயாராகிறேன்…

இதோ இப்போதும் விடாது பெய்து கொண்டே இருக்கிறது மழை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Message Us on WhatsApp