பிரபஞ்சம் போர்த்திய இயற்கை கணந்தோறும் வியப்புக் குறிகளை வரைந்து கொண்டே நகர்கிறது என் வாழ்வின் பக்கங்களில் நாளும்…
ஆவியாகும் கடல் நீரா? மழை!
பெருகி வழியும் மழையா? அருவி!
வழிந்து முடிந்த அருவியா? ஆறு!
ஓடி முடித்த ஆறா? கடல்!
சிறு விதைக்குள் பொதிந்திருக்கிறதா? மரம்!…
மரத்திற்குள் மறைந்திருக்கிறதா? கிளை!
கிளைகளுக்குள் ஒளிந்திருக்கிறதா? கனி!
கனிகளின் கருவறைக்குள் உறைந்திருக்கிறதா? விதை!
அந்தரத்தில் அப்படியே நிற்கிறதா? கோள்கள்!
கோள்களின் கடனால் ஒளிர்கிறதா? கதிரவன்!
கதிரொளியின் கண்சிமிட்டலால் சுழல்கிறதா? பூமி!
பூமி சுற்றுவதால்தான் உருக் கொள்கிறதா? உயிர்கள்!
உயிர்களின் தோன்றலில் இருப்பதுவா? இயற்கை!
இயற்கையின் ஆளுமைக்குள் ஆட்படுவதா? பரிணாமம்!
பரிணாமத்தின் வளர்ச்சியா? மனித இனம்!
மனிதத்தின் மகத்துவமா? ரசித்தல்!
ரசனையின் குழவியா? கவிதைகள்!
கவிதைகளின் விளை பொருளா? சிந்தனை!
சிந்தனையின் உள் தேக்கிய உணர்வுகளா? ! அனுபவம்!
அனுபவம் கற்றுத்தருவதா? முதிர்ச்சி!
முதிர்ச்சியின் முதலான வெளிப்பாடா? கருணை!
கருணையின் ஓர் குறியீடா? மனிதம்!
மனிதத்தின் மலர்ச்சியா? இறைமை!
இறைமையின் இருப்பா? இந்த இகம்!
இகத்தில் பெறும் இன்பமா? வியப்பு
என்று கணம் தோறும் வியந்து கிடக்கிறேன் இவ்வாழ்வினை!
– திரு.ராஜாராம்