நெடுஞ்சாலை முழுதும் சிறியதும் பெரியதுமான வாகனங்கள் பரபரப்பாய் நகரும் அந்தி மாலை.
அவை உறுமி உறுமி வெளித்தள்ளும் புகைச்சுருளின் நடுவே இரவுக்கு அஞ்சி சாலை கடக்க காத்திருக்கும் மங்கிய மாலைப் பொழுதுகளை கவனம் கொள்ள இயலாத பாதசாரிகள்.
விடாது ஒலிக்கும் கட்டுப்பாடற்ற ஒலிப்பான்களின் ஓசையை சகித்து நகரும் மக்கள்.
வடக்கத்திய உணவுக்கடைகளின் இரும்பு உருளைகளின் வழியே தெறிக்கும் மிளகுப் பொடி மணம் நாசி தொட்டு கடப்பதை ரசிக்கும் மக்கள்.
இரைச்சலின் ஊடே மண் படிந்த சாலையோரக் கடைகளில் கொதித்து முடித்த மசாலா குழம்புகளில் தட்டித் தட்டி செப்பனிடப்படும் மைதா கலவையின் கருகிய நெடியை மோப்பம் பிடித்தபடி சில மக்கள்
வேர்த்துக் கிடக்கும் உள்ளங்கைகளின் உள்ளே ஒடுங்கிய ஆவி பறக்கும் கண்ணாடி தேநீர் குவளையோடு பல மக்கள்.
ரசிக்க யாருமின்றி கீழ்வானில் பூத்த மஞ்சள் நிலா என்னைப் பார்த்து சிரிப்பதை என் இதயம் மட்டும் உணர்கிறது